1st Test, Day 3: அணியை சரிவிலிருந்து மீட்ட நஜ்முல்; முன்னிலைப் பெற்றது வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியைப் பொறுத்தமட்டில் மொமினுல் ஹக் 56 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களையும், ஜக்கர் அலி 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெசிங் முசரபானி மற்றும் வெலிங்டன் மஸகட்சா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் 57 ரன்களையும், சீன் வில்லியம்ஸ் 59 ரன்களையும், நியாஷா மயாவோ 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணியானதுமுதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்த கையோடு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளையும், நஹித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 4 ரன்னில் நடையைக் கட்டினார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மஹ்முதுல் ஹசன் ஜாய் 28 ரன்களுடனும், மொமினுல் ஹக் 15 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 33 ரன்களிலும், அரைசதத்தை நெருங்கிய மொமினுல் ஹக் 47 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
மேற்கொண்டு முஷ்ஃபிக்கூர் ரஹிமும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்ன்ர் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - ஜக்கார் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியிம் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் முன் கூட்டியே முடிவடைந்தது. இதனால் வங்கதேச அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களைச் சேர்த்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோ 60 ரன்களுடனும், ஜக்கர் அலி 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முசரபானி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணியானது நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.