ஓய்வை அறிவித்த உலகக்கோப்பை கேப்டன்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஆட தகுதியான வீரர்கள் ஏராளமானோர் இந்தியாவில் உள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் ஆட அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் இந்திய அணி ஆடியது. அந்தளவிற்கு அதிகமான வீரர்கள் உள்ளனர்.
இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் இருந்தாலும், அணியில் 11 பேர் மட்டுமே ஆடமுடியும். அதனால் நிறைய திறமையான வீரர்களுக்கு இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
அந்தமாதிரியான வீரர்களில் ஒருவர் தான் உன்முக்த் சந்த். 2012ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன். அந்த உலக கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 111 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, கோப்பையை வென்று கொடுத்தார்.
அதன்பின்னர் இந்தியா ஏ அணியில் ஆடிய உன்முக்த் சந்த், 2015 வரை இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் இருந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2014 டி20 உலக கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களுக்கான 30 வீரர்களை கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்த உன்முக்த் சந்துக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய அணியில் தற்போது மிகக்கடும் போட்டி நிலவுவதால் இனிமேல் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த உன்முக்த் சந்த், வெளிநாட்டு அணிகளுக்காக ஆட ஏதுவாக இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 28 வயதான உன்முக்த் சந்த் இன்று இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
மேலும் அவர் அமெரிக்கா அணிக்காக ஆடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உன்முக்த் சந்த் ஐபிஎல்லில் 21 போட்டிகளில் ஆடி 300 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.