அதிர்ஷ்டவசமாக ரன் ரேட் எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது - டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!
தென் ஆப்பிரிக்க - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 4 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய திலக் வர்மா 20 ரன்களுக்கும், அக்ஸர் படேல் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங்கும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களைச் சேர்த்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது.
அதன்பின், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்தனர். அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரியான் ரிக்கெல்ட்சன் 13 ரன்களிலும், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 24 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர்கள் ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோரும் சொற்ப ரகளில் விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து பேசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், “இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது எங்கள் ரன் ரேட் கட்டுக்குள்ளே தான் இருந்தது. அந்த சமயத்தில் ஜெரால்ட் கோட்ஸி வந்த சில பவுண்டரிகளை அடித்ததும் எங்களின் வெற்றியும் எளிதானது. அதனால் நாங்கள் எப்போது இரண்டு ஷாட்டுகளை விளையாடினால் வெற்றியை எட்டும் இடத்தில் இருந்தோம். அதற்கேற்ற வகையில் ரசிகர்களும் எங்களை உற்சாகப்படுத்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இது என் அம்மாவின் பிறந்தநாள், அதனால் எனது குடும்பத்தை நேர்ந்த 20-30 பேர் இப்போட்டியை நேரில் வந்து பார்த்தனர். அது இந்த ஆட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்ல எனக்கு உதவியாக இருந்தது. அதேசமயம் இது கிரிக்கெட் விளையாட எனக்கு மிகவும் பிடித்த இடம் இது. அதனால் நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன், அதனால் நான் சுவாசிப்பதை கட்டுப்படுத்த முயற்சித்தேன். ஆனால், இறுதியில் நாங்கள் நினைத்தது நடந்தது” என்று தெரிவித்துள்ளார்.