IND vs BAN, 2nd Test: தொடர் மழையால் முன் கூட்டியே முடிவடைந்த முதல்நாள் ஆட்டம்!

Updated: Fri, Sep 27 2024 17:28 IST
Image Source: Google

வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படதா நிலையில், வங்கதேச அணியில் நஹித் ரானா மற்றும் தஸ்கின் அஹ்மத் ஆகியோர் நீக்கப்பட்டு தைஜுல் இஸ்லாம், கலீத் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ஷத்மான் இஸ்லாமும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த பெவிலியன் திரும்பினார். இதனால் வங்கதேச அணி 29 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இப்போட்டியில் அரைசதம டிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதம்பின் மொமினுல் ஹக்குடன் இணைந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின்னரும் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது அத்துடன் முடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கதேச அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்துள்ளது. இதில் மொமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், ரவி அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை