PAK vs ENG, 2nd Test: பாபர் ஆசாம் அரைசதம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!

Updated: Fri, Dec 09 2022 18:37 IST
2nd Test, Day 1: Pakistan spinner Abrar shines on debut, claims 7/114 against England
Image Source: Google

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் மற்றும் ஆலி போப் ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். பென் டக்கெட் 49 பந்தில் 63 ரன்களும், ஆலி போப் 61 பந்தில் 60 ரன்களும் அடித்தனர். ஜோ ரூட் (8), ஹாரி ப்ரூக் (9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

அதன்பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 30 ரன்களும், வில் ஜாக்ஸ் 31 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் மார்க் உட் அடித்து ஆடி 27 பந்தில் 36 ரன்கள் அடிக்க, 51.4 ஓவரில் 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.  இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் ஆடுவதை போல அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்து ஆல் அவுட்டானது. இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பாகிஸ்தான் ரிஸ்ட் ஸ்பின்னர் அப்ரார் அகமது அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கும் தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் இமாம் உல் ஹக் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். அதன்பின் 14 ரன்கள் எடுத்திருந்த அப்துல்லா ஷஃபிக்கும் விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே தடுமாறியது.

அதன்பின் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் - சௌத் சகீல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அபாரமாக செயல்பட்ட பாபர் ஆசாம் அரைசதம் கடந்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் பாபர் ஆசாம் 61 ரன்களுடனும், சௌத் சகீல் 32 ரன்களோடும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 174 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை