2nd Test, Day 1: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே!

Updated: Mon, Apr 28 2025 20:23 IST
Image Source: Google

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பென் கரண் மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தலா 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த நிக் வெல்ச் - சீன் வில்லியம்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பொறுப்புடன் விளையாடிய இருவரும் தங்களுடையை அரைசதங்களைக் கடந்ததுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 54 ரன்களில் நிக் வெல்ச் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வந்த கிரேய்க் எர்வின் 5 ரன்களிலுடன் நடையைக் கட்டினார். பின்னர் சிறப்பாக விளையாடி வந்த சீன் வில்லியம்ஸ் 67 ரன்களை எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் தஃபட்ஸ்வா சிகா 18 ரன்களுடனும், பிளெசிங் முசரபானி 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும், நயீம் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து ஒரு விக்கெட் கையிருப்பில் ஜிம்பாப்வே அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை