BAN vs IND, 2nd Test: சதத்தை தவறவிட்ட ரிஷப், ஸ்ரேயாஸ்; இந்தியா 314-ல் ஆல் அவுட்!
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் இந்திய அணி 100 ரன்கள் எடுப்பதற்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. கேப்டன் கேஎல்ராகுல், கில், புஜாரா, கோலி ஆகியோர் வரிசையாக அவுட் ஆகி இருந்தனர்.
பின்னர் வந்த பந்த், ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து 159 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். மொத்தம் 105 பந்துகளை எதிர்கொண்டு 93 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதில் ஒரு சிக்ஸர் 100 மீட்டருக்கும் மற்றொரு சிக்ஸர் 102 மீட்டருக்கும் விளாசி இருந்தார். அவரது டிரேட் மார்க் ஒற்றை சிக்ஸரும் இதில் அடங்கும்.
இருந்தாலும் அவரால் சதம் பதிவு செய்ய முடியவில்லை. 90+ ரன்களில் அவர் ஆறாவது முறையாக அவுட் ஆகியுள்ளார். மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயராவது சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 105 பந்துகளில் 2 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 87 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டெய்ல் எண்டர்களும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தும் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச தரப்பில் ஷாகிப் அல் ஹசன், தைஜுல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 87 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்களை எடுத்தது. இதனால் நாளை 80 ரன்கள் பின் தங்கிய நிலையில் அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.