வங்கதேச பவுலர்கள் எதற்கும் குறைந்தவர்கள் அல்ல - ரவிச்சந்திரன் அஸ்வின்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதிலும் மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. அடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் உதவ, 314 ரன்கள் அடித்தது. ரிஷப் பந்த் 93 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் இந்தியா 87 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் 73 மற்றும் ஜாகிர் ஹாசன் 51 ரன்கள் அடிக்க, 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 145 ரன்கள் என்ற சிக்கலான இலக்கை துரத்திய இந்தியா 74 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது.
அந்த தருணத்தில் எட்டாவது வீரராக களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்ரேயாஸ் ஐயருடன் பாட்னர்ஷிப் அமைத்து, ஆட்டத்தின் போக்கை இந்தியா பக்கம் திருப்பினார். இறுதியில் வெற்றியையும் பெற்று தந்தார். அஸ்வின் அடித்த 42 ரன்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் 29 ரன்கள் அடித்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட்டுகள் மற்றும் முக்கியமான கட்டத்தில் 42 ரன்கள் அடித்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த விருது பெற்றபின் பேசிய அவர் “இது மிகவும் சிக்கலான போட்டியாக அமைந்துவிட்டது. எட்டாவது இடத்தில் நான் இறங்கிய போது இந்திய அணியின் கையில் விக்கெட்டுகளும் இல்லை, போதிய பேட்ஸ்மேன்களும் இல்லை. நான் அவுட் ஆகிவிட்டால் அடுத்து வருபவர்கள் பவுலர்கள் என்பதால் அணிக்கு சிக்கல் ஆகிவிடும்.
அந்த தருணத்தில் நான் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஷ்ரேயாஸ் பக்கபலமாக இருந்தார். ஒன்று இரண்டு பவுண்டரிகள் அவர் அடித்தபோது எனக்கும் நம்பிக்கை வந்துவிட்டது. எனக்குள் இருந்த அழுத்தத்தை குறைத்து விட்டார். இனி இதுதான் சரியான நேரம் என்று நானும் அடிக்க துவங்கினேன். அது சாதகமாக அமைந்துவிட்டது.
வங்கதேச பவுலர்கள் எதற்கும் குறைந்தவர்கள் அல்ல. அவர்களை எக்காரணம் கொண்டும் ஒதுக்கி விட முடியாது. அழுத்தத்தை கொடுத்தார்கள். ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து கிட்டத்தட்ட திருப்பிவிட்டார்கள் என்றே கூறவேண்டும். இறுதியாக வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.