முகமது ஷமி, ஷாஹீன் அஃப்ரிடி சாதனையை சமன் செய்த ஆடம் ஸாம்பா!

Updated: Thu, Oct 26 2023 13:05 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரின் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது 21 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக 3 ஓவர்களை மட்டுமே வீசிய ஆடம் ஸாம்பா 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

அவர் எடுத்த இந்த நான்கு விக்கெட்டுகளின் மூலம் தற்போது இந்த உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளராக 13 விக்கெட்டுகளுடன் ஆடம் ஸாம்பா முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் அவர் மேலும் சில சாதனைகளை உலகக் கோப்பை போட்டியில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இதுவரை உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையில் முகமது ஷமி மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோர் மட்டுமே இருந்த வேளையில் தற்போது அவர்களுடன் ஆடம் ஜாம்பாவும் இணைந்துள்ளார்.

அதேபோன்று ஆஸ்திரேலியா அணி சார்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 4 விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் ஷேன் வார்னே (13முறை) அடுத்து ஆடம் ஸாம்பா (12 முறை) இரண்டாவது இடத்தில் உள்ளார். அதோடு ஆஸ்திரேலியா அணி சார்பாக உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் நபராக அவர் இந்த சாதனையை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை