நான் காயத்திலிருந்து முழுமையாக திரும்பி வந்து விட்டேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக 2-3 என தொடரை இழந்தது. இதற்கடுத்து ஆசியக் கோப்பை தொடர் இருக்கின்ற காரணத்தால் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக காயத்தில் இருந்து திரும்பி வந்த ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு அயர்லாந்துக்கு இந்திய அணி பயணப்பட்டது.
இந்தத் தொடரில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட, அந்தப் போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்றது. அந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டி முழுமையாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல்முறையாக சர்வதேச போட்டியில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து நேற்று தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நடைபெற இருந்தது. ஆனால் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணி வீரர்களுமே ஏமாற்றம் அடைந்தனர். இந்திய அணி பும்ரா தலைமையில் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என வென்று அசத்தியது. பும்ரா கேப்டனாக தன்னுடைய முதல் ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும், முதல் தொடரில் கேப்டனாக தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
போட்டி நடைபெறாமல் போனதற்கு பிறகு பேசிய பும்ரா, "வானிலை நன்றாக இருந்து போட்டிக்காக இவ்வளவு நேரம் காத்திருந்து போட்டி நடைபெறாமல் போவது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த தொடருக்கு கேப்டனாக இருப்பது மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் இருக்கிறது. மழை பெய்தாலும் அணியினர் ஆர்வமாக போட்டிக்காக இருந்தனர். அணியை வழிநடத்தும் வாய்ப்பை எல்லோரும் விரும்புகிறார்கள். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. நான் காயத்திலிருந்து முழுமையாக திரும்பி வந்து விட்டேன். தற்பொழுது எந்த பிரச்சனையும் கிடையாது" என்று கூறியுள்ளார்.
இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று தொடர் நாயகன் விருதை வென்ற கேப்டன்கள்
- சுரேஷ் ரெய்னா ஜிம்பாப்வே 2010
- விராட் கோலி இலங்கை 2017
- விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் 2019
- விராட் கோலி இங்கிலாந்து 2021
- ரோஹித் சர்மா நியூசிலாந்து 2021
- ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து 2023
- ஜஸ்ப்ரீத் பும்ரா அயர்லாந்து 2023