ஃபீல்டிங் எப்போதுமே எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது - சிக்கந்தர் ரஸா!
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷுப்மன் கில் 66 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முயிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். அதன்பின் இணைந்த தியான் மேயர்ஸ் - கிளைவ் மடாண்டே ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தியான் மேயர்ஸ் அரைசதம் கடந்தார்.
ஆனாலும் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே கேப்டன் ரஸா, “எங்கள் அணியில் பில்டிங் எப்போதுமே ஒரு பிரச்சினையாக இருக்கிறது என நினைக்கிறேன், எங்கள் ஃபீல்டிங்கை நினைத்து நாங்கள் பெருமைப்பட்டாலும், இன்றைய போட்டியில் அது முற்றிலும் தவறானதாக அமைந்தது. அதன் மூலமாக நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் கொடுத்தோம். அந்த ரன்களே எங்களுடைய தோல்விக்கும் காரணமாக அமைந்தது.
மேற்கொண்டு எங்கள் அணியின் டாப் ஆர்டரில் இன்னும் சில பிரச்சனைகள் உள்ளன. ஆனால் தொடக்க வீரர்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். இந்த தொடரில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் அவர்கள் நன்றாக ரன் குவிப்பார்கள் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 15 மேற்பட்ட தொடக்க வீரர்களை நாங்கள் பயன்படுத்திவிட்டோம். தற்போது நாடு முழுவதும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. எனவே நான் உட்பட சக வீரர்கள் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதனால் இளம் வீரர்கள் தவறு செய்வதை கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் மூத்த வீரர்கள் தங்களது செயல்பாடுகளில் முன்னேற வேண்டியது அவசியம். மற்றொரு சிக்கலை உருவாக்குவதன் மூலம் நீங்கள் சிக்கலை சரிசெய்ய முடியாது. நாங்கள் இந்த தொடரில் மூன்று தொடக்க வீரர்களை அணியில் தேர்வு செய்து இருக்கிறோம். என்னை பொருத்தவரை தொடக்க வீரர்களுக்கு தொடர்ந்து சில போட்டிகளில் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.