3rd Test, Day 2: பென் டக்கெட் அதிரடி சதம்; பாஸ்பாலில் மிரட்டும் இங்கிலாந்து!

Updated: Fri, Feb 16 2024 17:12 IST
3rd Test, Day 2: பென் டக்கெட் அதிரடி சதம்; பாஸ்பாலில் மிரட்டும் இங்கிலாந்து! (Image Source: Google)

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சதத்தின் மூலமும், சர்ஃப்ராஸ் கானின் அரைசதத்தின் மூலமாகவும் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 326 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன்கள் ஏதுமின்ரியும் என தொடர்ந்தனர். இதில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குல்தீப் யாதவ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சதமடித்து விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 112 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரவீச்சந்திரன் அஸ்வின் - துருவ் ஜுரெல் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.  அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அறிமுக போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜுரெல் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தறவிட்டார்.

இதையடுத்து களமிறங்கிய ஜஸ்ப்ரித் பும்ரா தனது பங்கிற்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ரெஹான் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் இங்கிலாந்துக்கே உரித்தான பாஸ்பால் யுக்தியை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி 39 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்து ஸாக் கிரௌலி 15 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இது அஸ்வினின் 500ஆவது டெஸ்ட் விக்கெட்டாகவும் அமைந்தது. 

ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத பென் டக்கெ தொடர்ந்து பவுண்டரிகளாக விளாச, அவருடன் இணைந்த ஒல்லி போப்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 88 பந்துகளில் தனது மூன்றாவது சர்வதேச சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுப்பக்கம் அரைசதம் அடிப்பா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒல்லி போப் 39 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் வந்த ஜோ ரூட்டும் விக்கெட்டை இழக்காமல் விளையாட, இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களைக் குவித்துள்ளது. இதில் பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 238 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை