எனக்கு மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லை - உஸ்மான் கவாஜா!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறக்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஜோடி ஹெட் மற்றும் கவாஜா 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தார்கள். ஹெட் 32 ரன்னில் அஸ்வின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் தந்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த லபுசேன் முகமது சமி பந்தில் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் கவாஜா உடன் ஜோடி சேர்ந்து 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 38 ரண்களில் ஜடேஜா பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோம் 17 ரன்களில் முகமது சமி பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கவாஜா மற்றும் கிரீன் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணிக்கு விக்கட்டுகள் விடாமல் பார்த்துக் கொண்டதோடு, ஆஸ்திரேலியா அணிக்கு ரண்களையும் சிறப்பாக கொண்டு வந்தார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவஜா இந்தத் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். கேமரூன் கிரீன் 49 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் முதல் நாள் முடிவில் எடுத்திருக்கிறது.
இந்நிலையில், சதம் அடித்த உஸ்மான் கவாஜா முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு பின் பேசிய போது, “நிறைய உணர்ச்சிகரமான தருணம் இது. ஒரு சதத்தை பெறுவது ஒரு நீண்ட பயணம். ஒரு ஆஸ்திரேலியனாக நீங்கள் எப்போதும் இதைச் செய்ய விரும்புகிறீர்கள். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஹெட் தாக்கி விளையாட ஆரம்பித்தார். எதிர் முனையிலிருந்து அவர் அப்படி விளையாடுவதை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இது ஒரு நல்ல விக்கெட்.
ஆனால் நான் என் விக்கட்டை கொடுக்க விரும்பவில்லை. எல்லா நேரங்களிலும் நான் அடிக்க விரும்பினேன், இதைத்தான் துணைக் கண்டத்தில் நான் வழக்கமாகச் செய்கிறேன். ஆனால் இன்று என்னை வெளியேற்ற முயற்சி செய்வது போல் இருந்தது. இது எல்லாவற்றையும் விட ஒரு மனப் போராட்டமாக இருந்தது. நீங்கள் உங்கள் ஈகோவை அகற்ற வேண்டும். நீங்கள் அதை நீண்ட நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும், மேலும் செயல்முறைகளைப் பின்பற்றி, முடிந்தவரை அணிக்காக பேட்டிங் செய்ய வேண்டும். எனக்கு மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.