சிரிப்பலையை ஏற்படுத்திய வங்கதேச வீரர்கள்; ஒரு பந்தை பிடிக்க ஓடிய 5 வீரர்கள் - வைரலாகும் காணொளி!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், கலெத் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப் ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 178 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 455 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணி வீரர்கள் செய்த செயல் குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இலங்கை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது இன்னிங்ஸின் 21ஆவது ஓவரை ஹசன் மஹ்முத் வீசினார். அதனை எதிர்கொண்ட பிரபாத் ஜெயசூர்யா பேக்வேர்ட் திசையில் அடித்தார். பந்து பவுண்டரியை நோக்கி சென்றிருந்த போது, ஸ்லீப் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அனைத்து வீரர்களும் பந்தை பிடிக்க சென்றனர்.
குறிப்பாக அந்த ஓவரில் மொத்தமாக 4 ஸ்லீப் மற்றும் கல்லி பாய்ண்ட் திசையில் ஒரு வீரர் என மொத்தம் 5 வீரர்கள் பவுண்டரியை தடுக்க ஓடினர். இறுதியில் அவர்கள் பந்தை தடுத்தனர். இந்நிலையில் ஒரு பந்தை தடுக்க 5 வீரர்கள் ஓடிய சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் வங்கதேச அணி வீரர்கள் மூவர் இணைந்து ஒரு கேட்சை தவறவிட்ட காணொளி வைரலான நிலையில், இக்காணொளியும் வைரலாகி வருகிறது