5th Test Day 1: ஸாக் கிரௌலி அரைசதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

Updated: Thu, Mar 07 2024 11:47 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணியின் அஸ்வின், இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தங்களது 100ஆவது போட்டியில் விளையாடுகின்றனர். 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். எப்போதும் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இன்றைய போட்டியில் நிதான ஆட்டத்தை கையாண்டனர். இதன் மூலம் தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்களைச் சேர்த்தனர். 

அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் டக்கெட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  

இதனால் இங்கிலாந்து அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஸாக் கிரௌலி 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை