WI vs BAN: ஒருநாள் தொடரில் இருந்து ஷமார் ஜோசப், மேத்யூ ஃபோர்ட் விலகல்!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தின.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் காயம் காரணமாக கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோவுக்கு இடம்பிடிக்கவில்லை.
மேற்கொண்டு அணியின் நட்சத்திர வீரர் தாவ்ஹித் ஹிரிடோயும் காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு குழந்தை பிறப்பின் காரணமாக அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இத்தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து இந்த ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் மற்றும் ஜூவெல் அண்ட்ரூ அகியோர் நீக்கப்பட்டு, ஜஸ்டின் க்ரீவ்ஸ் மற்றும் அறிமுக வீரர் அமிர் ஜங்கூ ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. மேலும் இந்த அணியின் கேப்டனாக ஷாய் ஹோப் மற்றும் துணைக்கேப்டனாக பிராண்டன் கிங் ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமார் ஜோசப் மற்றும் மேத்யூ ஃபோர்ட் ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால் இருவரும் இந்த ஒருநாள் தொடரை தவறவிடுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தொடரில் இருந்து விலகிய ஷமார் ஜோசப், மேத்யூ ஃபோர்ட் ஆகியோருக்கு பதிலாக இளம் வீரர்களான மார்க்வினோ மைண்ட்லி மற்றும் ஜெடியா பிளேட்ஸ் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர். இருப்பினும் ஷமார் ஜோசப் மற்றும் மேத்யூ ஃபோர்ட் போன்று அனுபவ வீரர்கள் காயம் காரண்மாக தொடரிலிருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), பிராண்டன் கிங், ஜெடியா பிளேட்ஸ், கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், எவின் லூயிஸ், மார்க்வினோ மைண்ட்லி, குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேச ஒருநாள் அணி: மெஹ்தி ஹசன் மிராஸ் (கேப்டன்), லிட்டன் தாஸ், தஞ்சீத் ஹசன் தமீம், சௌமியா சர்க்கார், பர்வேஸ் ஹுசைன் எமன், முகமது மஹ்முதுல்லா, ஜெகர் அலி அனிக், அஃபிஃப் ஹுசைன், ரிஷாத் ஹுசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சீம் ஹசன் ஷாகிப், நஹீத் ராணா.