நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுகள் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை அடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களாக முகமது நயிம், மெஹிதி ஹசன் களமிறங்கினர். ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும், நயிம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
ஆனால், சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷாகீப் அல் ஹசன் 53 ரன்களையும், முஷ்பிகூர் ரஹிம் 64 ரன்களையும் சேர்ந்ததனர். ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் வங்கதேசம் 38.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுல்ப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 20 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 17 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இமாம் உல் ஹக்குடன் இணைந்த முகமது ரிஸ்வானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தார். இதில் இமாம் உல் ஹக் அரைசதம் அடித்த கையோடு 78 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தனர். வங்கதேசம் தரப்பில் பந்துவீசிய டஸ்கின் அகமது, சொரிஃபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.