வான்கடேவில் சச்சினுக்கு சிறப்பு கௌரவம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகிற மார்ச் 31-ம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கரோனாவுக்கு முந்தைய காலக்கட்டம் போல், சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதபாத், கொல்கத்தா உள்ளிட்ட எல்லா முக்கிய நகரங்களிலும் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கெல்லாம் மேலாக கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் அவருக்கு முழு திருவுருவ சிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கள் தனது 50ஆவது பிறந்த நாளை ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடவுள்ளார்.
இதனால் அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் ஐபிஎல் போட்டியின் போது இந்த சிலையை திறக்கவுள்ளனர் மும்பை கிரிக்கெட் சங்கத்தினர். ஒருவேளை சிலை நிறுவும் பணி ஐபிஎல் போட்டிக்குள் முடியவில்லையெனில், அக்டோபர் - நவம்பரில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையின் போது இந்த விழா நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமோல் காலே கூறுகையில், “பாரத ரத்னா விருதுபெற்ற சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டுக்காக என்ன செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 50 வயதை தொடவுள்ள நிலையில், சச்சினை பாராட்டும் வகையில் அவருக்காக மும்பை கிரிக்கெட் சங்கம் செய்யும் சிறிய அடையாளமாக இந்த சிலை நிகழ்வு இருக்கும். சச்சினிடம் இதுகுறித்து பேசியப்பிறகு, அவரது ஒப்புதலைப் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சச்சினின் பெயரில் வான்கடே மைதானத்தில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது அவருக்கு சிலை வைக்க உள்ளது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். இதுதொடர்பாக சச்சின் கூறுகையில், “மிகவும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கை இங்குதான் துவங்கியது. நம்பமுடியாத நினைவுகளுடன் கூடிய பயணங்கள் நிறைந்த இடம் இது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம், இந்த மைதானத்தில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
சச்சின் மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அதிக சதங்கள் (100) விளாசிய வீரர் என்ற சாதனையுடன், அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை எடுத்துள்ளார்.