கையிலிருந்த கேட்சை கோட்டை விட்ட ஸ்டோக்ஸ் - வைரல் காணொளி!
வரலாற்று சிறப்புமிக்க இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்ற நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்மித் ரன் அவுட் ஆகியும் பைல்ஸ் சரியாக விழவில்லை என்று கூறி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான தீர்ப்பை நடுவர் வழங்கி விட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 395 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. ஐந்தாவது நாள் தொடக்கத்தில் 135 ரன்கள் விக்கெட் ஏதுமின்றி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. டேவிட் வார்னர் 60 ரன்களிலும், உஸ்மான் கவஜா 72 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க மார்னஸ் லபுஷாக்னே 13 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் மோயின் அலி வீசிய பந்தில் ஸ்மித் அடிக்க முயன்ற போது அது கையில் பட்டு பின்னால் நின்று கொண்டிருந்த கேப்டன் ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆனது. எனினும் அந்த கேட்சை பிடித்து கொண்டாடுவதற்குள் பந்து அவருடைய கையில் வழுக்கி விட்டு சென்றது.
இதனை அவுட் கேட்கலாமா வேண்டாமா என இங்கிலாந்து வீரர்கள் முழித்துக் கொண்டிருந்த நிலையில் ஸ்டோக்ஸ், டி ஆர் எஸ் கேட்டார். அப்போது ரீப்ளேவில் ஸ்மித் கையில் பட்டு தான் பந்து சென்றது என தெரிய வந்தது. ஆனால் ஸ்டோக்ஸ் அந்த கேட்சை பிடித்து பந்தை கையில் வைத்துக் கொள்ளாமல் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பந்தை தூக்கி போட அது அவரது கையை விட்டு நழுவி சென்றது.
இதனால் அவர் சரியாக கேட்ச் பிடிக்கவில்லை எனக் கூறி இதற்கு நடுவர் நாட் அவுட் வழங்கி விட்டார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையில் ஏற்படுத்தி இருக்கிறது . இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருவது குறிபிடத்தக்கது.