ஷுப்மன் கில் பேட்டிங் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!

Updated: Fri, Jul 14 2023 14:11 IST
Aakash Chopra on Shubman Gill's dismissal in 1st India vs West Indies Test! (Image Source: Google)

இந்திய அணியின் வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இடம்பெற்றார். தொடக்க வீரரான இவர் அணியில் இடம் பெற்றதும் ஏற்கனவே துவக்க வீரராக விளையாடி வந்த ஷுப்மன் கில் தன்னை மூன்றாவது வீரராக கீழே இறக்கிக் கொள்ள தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்டு கீழே இறக்கி கொண்டார்.

இந்த முறை இவரது துவக்க இடத்தில் வந்த அறிமுக டெஸ்ட் வீரர் ஜெய்ஷ்வால் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தற்பொழுது ஆட்டம் இழக்காமல் 143 ரன்கள் உடன் களத்தில் நிற்கிறார். அறிமுகவீரராக இந்திய அளவில் மட்டும் இல்லாது உலக அளவிலும் சில சாதனைகள் செய்வதற்கு அவருக்கு தற்பொழுது மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கிறது.

அதே சமயத்தில் தமது துவக்க இடத்தை விட்டுக் கொடுத்து மூன்றாவது இடத்தில் வந்த ஷுப்மன் கில் எதிர்பார்ப்புக்கு மாறாக 6 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த முறை அவரது தரத்திற்கு மிகவும் குறைவாக இருந்தது என்பதுதான் உண்மை. தற்பொழுது இவரது ஆட்டம் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இது பற்றி கொஞ்சம் விரிவாகவே பேசி இருக்கிறார். இதற்கு முன்பாக இந்தியாவில் வைத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் கில் ஆட்டம் இழந்ததை வைத்து உதாரணம் காட்டி இருக்கிறார்.

இதுகுற்த்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “ஷுப்மன் கில் மூன்றாவது இடத்தில் வந்தார். இந்த இடம் கடினமானது என்று அவர் தற்போது புரிந்து இருப்பார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் பெரும்பாலும் தொடக்க வீரராகவே விளையாடி வந்தார். இந்த முறை மூன்றாவது வீரராக வந்ததோடு ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்குப் பிறகு வந்தார். மேலும் கைகளை தளர்த்தாமல் கடினமாக வைத்து விளையாடி ஆட்டம் இழந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கில் ஆட்டம் இழந்தது உங்களுக்கு நினைவிருந்தால் இது அதே மாதிரியாக இருக்கும். அப்பொழுது பந்துவீச்சாளராக குகமேனன் இருந்தார். கில், ஸ்மித் இடம் கேட்ச் கொடுத்தார். அப்பொழுதும் பந்துக்கு கைகளை தளர்த்தாமல் மிகவும் இறுக்கமாக கடினமாக வைத்து விளையாடித்தான் ஆட்டம் இழந்தார். அவர் இந்த முறையில் விளையாடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவருக்கு பிறகு வந்த விராட் கோலி தமக்கு தேவையான நேரத்தை கொடுத்துக் கொண்டார். எதிரணியும் மிகவும் தட்டையாகத் தெரிகிறது. மேலும் அவர்கள் ஒன்பது பந்துவீச்சார்களை பயன்படுத்தி நூறு ஓவர்கள் வரை பழைய பந்திலேயே பந்து வீசினார்கள். விராட் கோலி இப்பொழுது செட்டில் ஆகி நல்ல நிலையில் இருக்கிறார். இந்தியா தற்பொழுதுள்ள நிலையில் 162 ரன்கள் என மிகவும் பெரிய முன்னிலையில் இருக்கிறது. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருக்கிறது. மேலும் அவுட் ஃபீல்டு மிகவும் மெதுவாக இருக்கிறது. இங்கு விரைவாக ரன்கள் எடுப்பது கடினம். ஆனால் நிலைத்து நிற்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை