கேஎல் ராகுல் கிடைத்தால் நாம்மால் சாம்சனை பார்க்க இயலாது - ஆகாஷ் சோப்ரா!

Updated: Fri, Aug 11 2023 14:10 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்வதில் மிகதீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் தயாரிப்பு நிலையில்தான் எல்லாமே இருக்கிறது என்பது வருத்தமான ஒன்று. உலகக் கோப்பை நெருங்குவதற்கு கொஞ்சம் முன்பாகவே இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடக்கூடிய வீரர்களாக இருந்த மிக முக்கியமான வீரர்கள் சிலர் திடீரென எதிர்பாராத காயத்தில் சிக்கியது இந்திய அணி நிர்வாகத்தின் உலகக் கோப்பை தயாரிப்புக்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது. 

இதன் காரணமாக உலகக் கோப்பைக்கு முன் நடக்கும் கடைசி ஆட்டத்தில் கூட பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது. இந்திய அணிக்கான ஒருநாள் கிரிக்கெட்டின் தற்போதைய முதன்மை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் காயத்திலிருந்து திரும்பி வருவாரா? நான்காவது இடத்துக்கான பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து திரும்பி வருவாரா? என்கின்ற கேள்விகள் பெரிய பின்னடைவுகளை தந்து கொண்டிருக்கிறது.

இந்த இடங்களுக்கு வீரர்களை கண்டறிவதற்காக தற்பொழுது இந்திய அணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து பரிசோதனை செய்து கொண்டிருக்கிறது. எனவே பரிசோதனைக்கான வீரர்களுக்கு வாய்ப்புகள் தர வேண்டியது முக்கியமான கடமையாக இருக்கிறது. இதனால் ஒரு உறுதியான முடிவுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் வர முடியவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, “இந்த நேரத்தில் கே எல் ராகுல் கிடைத்தால், உலகக் கோப்பை அணியில் மட்டும் கிடையாது ஆசிய கோப்பை அணியிலும் நம்மால் சஞ்சு சாம்சனை பார்க்க முடியாது. அவருக்கான வேலை முடிந்து விட்டது. அவரை வெளியேற்றி விடுவார்கள். அதே சமயத்தில் அவருக்கு 32 – 34 வயது ஆகவில்லை. சாம்சனுக்கு 28 வயதுதான் ஆகிறது. இதனால் இந்த விஷயத்தில் பெரிய டென்ஷன் கிடையாது. எனவே அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக பேச முடியாது. 

நம்மிடம் அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை உள்ளது அது இல்லாமல் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. இருப்பினும் கேஎல் ராகுல் இந்திய அணிக்கு காயத்திலிருந்து திரும்ப கிடைக்காமல் போனால், நாம் இப்போதைக்கு சஞ்சு சாம்சனை ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் பார்க்கலாம். உலகக் கோப்பையில் கூட பார்க்கலாம். ஆனால் இதெல்லாம் கே எல் ராகுல் கிடைப்பதை பொறுத்துதான் அமையும்” என்று கூறியிருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நான்காவது இடத்துக்கான வீரர் என்று நம்பிக்கையாக அம்பதி ராயுடுவை உருவாக்கி, இறுதி நேரத்தில் அவரை வேண்டாம் என்று இந்திய அணி நிர்வாகம் கழட்டிவிட்டது. தற்பொழுது சாம்சனுக்கு வாய்ப்புகள் தந்து இறுதியில் அம்பதி ராயுடுக்கு நடந்தது போலவே நடக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை