IND vs SL : இந்திய அணியை தவான் வழிநடத்த வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
விராட் கோலி, ரோகித், பும்ரா, கே.எல்.ராகுல், ஜடேஜா என அணியின் மிக முக்கிய வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதால் தவான், பிருத்வி ஷா, சூரியகுமார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக், குர்ணால், புவனேஷ்வர் குமார், சைனி, தீபக் சாஹர், சஹால், ராகுல் சாஹர், குல்தீப் யாதவ் மாதிரியான வீரர்கள் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார்கள் என தெரிகிறது.
பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னதாக சொன்னதை போலவே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் புதிய இந்திய அணியை அனுப்புவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு தவானுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கேப்டன் பரிசீலனையில் ஹர்திக் பாண்டியா பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,“அணியில் இடம்பிடிக்க உள்ள மூத்த மற்றும் அனுபவ வீரரான தவனுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்க வேண்டும். அது தான் பொருத்தமாக இருக்கும். ஹர்திக் பாண்ட்யாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கலாம். அவரது சகோதரர் குர்ணால் ஒருநாள் போட்டிகளில் முக்கியமான ஆல் ரவுண்டராக இருப்பார். தவானுடன் பிருத்வி ஷா தொடக்க வீரராக களம் காண வேண்டும்.
ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் அணிக்கு பலம் சேர்ப்பர். அதேசமயம் தீபக் சாஹர், சாஹல், புவனேஷ்வர் குமார் என மூவரும் அணியின் முதல் நிலை பவுலர்களாக செயல்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தொடரின் போது தேவ்தத் படிக்கல், வருண் சக்கரவர்த்தி, ராகுல் திவேத்தியா,, ரவி பிஸ்னோய், ஹர்ஷல் பட்டேல் என சில இளம் வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் காணுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.