ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சத்தை எட்டிய அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
முன்னதாக இரண்டாம் இடத்தில் இருந்து திலக் வர்மா இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு இங்கிலாந்தின் பில் சால்ட் 4ஆம் இடத்திற்கும், இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 5ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகீல் ஹொசைன் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஆதில் ரஷித் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்ற வருண் சக்ரவர்த்தி 3 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு வநிந்து ஹசரங்கா நான்காம் இடத்திற்கும், ஆடம் ஸாம்பா 5ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ள நிலையில், ரவி பிஷ்னோய் 4 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் அர்ஷ்தீப் சிங் ஒரு இடம் பின் தங்கி 9ஆம் இடத்தையும், அக்ஸர் படேல் 2 இடங்கள் பின் தங்கி 13ஆம் இடத்தியும் பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.