டி10 லீக்: முகமது வாசீம் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ்!

Updated: Sat, Dec 03 2022 22:20 IST
Image Source: Google

கிரிக்கெட்டின் மறுவடிமாக பார்க்கப்படும் டி10 கிரிக்கெட் தொடர் அபுதாபில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 6ஆவது சீசனாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் - மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மோரிஸ்வில்லே அணியில் ஜான்சன் சார்லஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கரிம் ஜானத் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்த மொயீன் அலியும் 12 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.

அதன்பின் வந்த டேவிட் மில்லர், ஷிம்ரான் ஹெட்மையர், டுவைன் பிரிட்டோரியர்ஸ் என அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் மோரிஸ்வில்லே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூயார்க் அணி தரப்பில் அகீல் ஹொசைன், ரவி ராம்பால், ஜோர்டன் தாம்சன், ரியாஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய நியூயார்க் அணியில் பால் ஸ்டிர்லிங் ஒரு ரன்னோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஈயன் மோர்கனும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய முகமது வாசீம் அதிரடியாக விளையாட, அசாம் கான், ஜோர்டன் தாம்சன், கீரேன் பொல்லார்ட், ரஷித் கான் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது வாசீம் 36 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெறவைத்தார். இதன்மூலம் நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை