அபுதாபி டி10 லீக் 2023: டி காக் அதிரடியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது டெல்லி புல்ஸ்!

Updated: Wed, Nov 29 2023 20:28 IST
Image Source: Google

கிரிக்கெட்டின் அடுத்த வடிவமாக கருதப்படும் டி10 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கியுள்ளன. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி10 கிரிக்கெட் தொடரானது 6 சீசன்களைக் கடந்த 7ஆவது சீசனை வெற்றிகரமாக தொட்டங்கியுள்ளது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - டெல்லி புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய டெக்கான் அணிக்கு கொஹ்லர் காட்மோர் - ஆண்ட்ரே ஃபிளட்செர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் ஆண்ட்ரே ஃபிளட்சர் 34 ரன்களில் ரன் அவுட்டாக, மறுபக்கம் கொஹ்லர் காட்மோரும் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இறுதியில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையாக ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 120 ரன்களைக் குவித்தது. அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இன்னிங்ஸின் முதல் ஓவரிலிருந்து சிக்சர்களும் பவுண்டரிகளுமாக விளாசிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 73 ரன்களைச் சேர்த்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் 13 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த டெக்கான் அணி பந்துவீச்சாளர்கள் மேற்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். 

அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 12 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் என 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி புல்ஸ் அணி 8.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை