AFG vs BAN, 1st ODI: நபி, கஸான்ஃபர் அபாரம்; வங்கதேசத்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
வங்கதேச அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று (நவம்பர் 06) ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்ல குர்பாஸ் மற்றும் செதிகுல்லா அடல் இணை தொடக்காம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து வந்த ரஹ்மத் ஷாவும் 2 ரன்களுடன் நடையைக் கட்டி பெவிலியனுக்கு திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் செதிகுல்லா அடல் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில், 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய முகமது நபி ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், குல்பதின் நைப் 22 ரன்களுக்கும், ரஷித் கான் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமற்றமளித்தனர்.
இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த முகமது நபி சதமாடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் கரோட்டி மட்டும் 27 ரன்களை எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் 3 ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த சௌமீயா சர்க்கார் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சௌமீயா சர்க்கார் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸூம் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதத்தை நெருங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ 47 ரன்களில் தனது விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் 28 ரன்களுடன் மெஹிதி ஹசன் மிராஸும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணியானது அதான்பின் அல்லா கஸான்ஃபரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 143 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதிலும் குறிப்பாக அந்த அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்காளில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்லா கஸான்ஃபர் 6 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தன் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆஃப்கான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்லா கஸான்ஃபர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.