ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதற்கு தயாராகும் வகையில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹமந்தட்டாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் சத்ரான் அரைசதம் கடந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 பவுண்டரி 2 சிக்சர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 227 ரன்களைக் குவித்து அசத்தினர். அதன்பின் களமிறங்கிய முகமது நபி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 151 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த பாபர் ஆசாமும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் பாபர் ஆசாம் 53 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வான் 2 ரன்களிலும், ஆகா சல்மான் 14 ரன்களுக்கும், உஸாமா மிர் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இமாம் உல் ஹக் 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

Advertisement

அதன்பின் இணைந்த இஃப்திகார் அஹ்மத் - ஷதாப் கான் இணை அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இதில் இஃப்திகார் அஹ்மத் 17 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 27 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆஃப்கான் தரப்பில் 49ஆவது ஓவரை அப்துல் ரஹ்மான் வீச அதனை எதிர்கொண்ட ஷதாப் கான் பவுண்டரி, சிக்சர் என 16 ரன்களைச் சேர்த்து அசத்தினார். 

இதனால் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஃப்கான் தரப்பில் ஃபசல்ஹக் ஃபாரூக்கி கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையாக இருந்த ஷதாப் கான் 48 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஆனாலும் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராவுஃப் இணை அதிரடி காட்ட பாகிஸ்தான் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் ஆட்டத்தை முடித்து த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் ஆஃப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News