ராகுலின் கருத்திற்கு உடன்படுகிறேன் - திலீப் வெங்சர்க்கார்
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது.
கடைசியாக 2007ஆம் இந்திய அணி ராகுல் டிராவிட்டின் தலைமையில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன்பின்னர் 2014, 2018 ஆகிய இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், இந்த சுற்றுப்பயணத்தில் முன்னெப்போதையும் விட சிறந்த பந்துவீச்சாளர்களுடன் இந்தியா இங்கிலாந்துக்கு சென்றிருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
2007ஆம் இங்கிலாந்து மண்ணில் தனது கேப்டன்சியில் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராகுல் டிராவிட்டின் கருத்துடன் தான் உடன்படுவதாக முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள திலீப் வெங்சர்க்கார், “ராகுல் டிராவிட்டுடன் நான் உடன்படுகிறேன். இங்கிலாந்துக்கு இம்முறை உலகத்தரம் வாய்ந்த சிறந்த பவுலர்களுடன் நாம் சென்றிருக்கிறோம். எனவே இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஷமி, பும்ரா, சிராஜ், இஷாந்த் ஆகியோர் டாப் கிளாஸ் பவுலர்கள். எனவே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.