ஐபிஎல் 2023: தோல்விகான காரணத்தை விளக்கிய ஐடன் மார்க்ரம்!
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த முடிவு ஹைதராபாத் அணிக்கு எந்த வகையிலும் சாதகமாக அமையவில்லை. பேட்டிங்கில் ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக துவக்க வீரர் அன்மோல்பிரீத் சிங் 31 ரன்கள், ராகுல் திரிப்பாதி 35 ரன்கள் மற்றும் பினிஷிங்கில் அப்துல் சமாத் 21 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 100+ ரன்களுக்கு எடுத்துச்சென்றனர்.
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் 35 ரன்கள், க்ருனால் பாண்டியா 34 ரன்கள் அடித்தனர். இறுதியில் 16 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் அடித்து இலக்கை எட்டியது லக்னோ அணி. இதன் மூலம் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரின் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற முதல் போட்டியில் இப்படி மோசமாக தோல்வியை தழுவியிருப்பது குறித்து பேசிய ஐடன் மார்க்ரம், “150-160 ரன்கள் அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இறங்கினோம். அந்த ஸ்கோரை அடிக்க முடியவில்லை. போதிய ரன்கள் அடிக்காததால் அந்த இடத்திலேயே பின்னடைவை பெற்றுவிட்டோம்.
துரதிஷ்டவசமாக, ஆரம்பத்தில் நிறைய விக்கெட்டுகளை இழந்து எங்களுக்கு நாங்களே அழுத்தித்தை கொடுத்துக் கொண்டோம். அங்கு முதல் தவறு நேர்ந்தது. எங்களது பந்துவீச்சாளர்களுக்கு கட்டுப்படுத்துவதற்கு போதிய ரன்களை நாங்கள் அடித்துக் கொடுக்கவில்லை. இதனால் அவர்களால் லக்னோ அணிக்கு அழுத்தத்தை கொடுக்க முடியவில்லை. இந்த கண்டிஷனை தெரிந்து நன்றாக ஆடினார்கள். இன்றைய போட்டியில் எங்களுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை” என்று தெரிவித்தார்.