ஒரு பேட்ஸ்மனாக நான் என்னுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தேன் - ஐடன் மார்க்ரம்!

Updated: Sun, Oct 08 2023 12:32 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆற்றத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது. 

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்து 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பாக டி காக், வாண்டர் டுசன், எய்டன் மார்க்ரம் ஆகியோர் சதம் அடித்தனர்.

பின்னர் 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் குவித்ததால் 102 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது தெ.ஆ அணி சார்பாக நான்காவது வீரராக களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர் மார்க்ரம் 54 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 106 ரன்கள் குவித்து வானவேடிக்கை நிகழ்த்தினார். இவரது இந்த ஆட்டம் பல்வேறு சாதனைகளை அவருக்கு பெற்று தந்த வேளையில் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் மார்க்ரம் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் போட்டி முடிந்து தனது அதிரடி குறித்து பேசிய அவர், “உண்மையிலேயே இந்த போட்டியில் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. டி காக் மற்றும் வாண்டர் டுசன் ஆகியோர் சரியான பிளாட்பார்ம் அமைத்ததால் பின்னால் வந்த எங்களுக்கு சுதந்திரமாக விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில நாட்கள் இப்படி அமையும் ஒரு சில நாட்கள் இப்படி அமையாது. இருப்பினும் ஒரு பேட்ஸ்மனாக நான் என்னுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தேன்.

மற்ற அணிகளை போன்று நாங்களும் பாசிட்டிவான ஆட்டத்தை விளையாட நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியில் நான் மைதானத்தின் தன்மையை அறிந்து பாசிட்டிவாக விளையாடியதாக நினைக்கிறேன். இந்த மைதானமும் பேட்டிங்-க்கு நன்றாகவே ஒத்துழைத்தது. உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து வெற்றியுடன் ஆரம்பிப்பது எங்களுக்கு நல்லதொரு நம்பிக்கையை தந்துள்ளது” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை