நோ-பாலில் தவறவிட்ட முதல் விக்கெட்; தவறை திருத்தி கம்பேக் கொடுத்த ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி!

Updated: Fri, Feb 23 2024 12:12 IST
நோ-பாலில் தவறவிட்ட முதல் விக்கெட்; தவறை திருத்தி கம்பேக் கொடுத்த ஆகாஷ் தீப் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தனது வாய்ப்பை பெற்றார். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

அப்பாது இன்னிங்ஸின் நான்காவது ஓவரை வீசிய அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது அபார பந்துவீச்சின் மூலம் ஸாக் கிரௌலியை க்ளீன் போல்ட்டாக்கினார். தனது முதல் சர்வதேச விக்கெட்டை ஆகாஷ் தீப் சக வீரர்களுடன் இணைந்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். ஆனால் அவரின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் ஆகாஷ் தீபின் பந்துவீச்சை மூன்றாம் நடுவர் சோதிக்க, அது நோ-பால் என்பது தெரியவந்தது. 

இதையாடுத்து மீண்டும் க்ரீஸுக்குள் வந்த ஸாக் கிரௌலி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். அதேசமயம் மறுபக்கம் சற்றும் மனம் தளராமல் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் இன்னிங்ஸின் 10ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் பென் டக்கெட்டையும், 4ஆவது பந்தில் ஒல்லி போப்பின் விக்கெட்டையும் கைப்பற்றி மிரட்டினார். 

 

அதன்பின்னும் தனது ஆக்ரோஷமான பந்துவீச்சை நிறுத்தாத ஆகாஷ் தீப் 12ஆவது ஓவரின் 5அவது பந்தில் மீண்டும் ஸாக் கிரௌலியும் விக்கெட்டை வீழ்த்தி மாஸ் கம்பேக்கைக் கொடுத்தார். இம்முறை அவரது பந்துவீச்சில் எந்த தவறுமில்லாமல் ஸ்டம்புகளை தகர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி தடுமாற, அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் விக்கெட்டுகளை இழந்தனர்.

 

இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல்நாள் முதல் செஷனிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்நிலையில், இப்போட்டியில் ஆகாஷ் தீப், ஸாக் கிரௌலியின் விக்கெட்டை நோ-பாலால் தவறவிட்டது, அதன்பின் அசத்தலான கம்பேக் கொடுத்தது குறித்துமான காணொளிகள் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை