நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் - சோயப் அக்தர்!

Updated: Sun, Jun 12 2022 14:43 IST
Akhtar recalls 2011 WC SF vs IND (Image Source: Google)

கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு இரு நாட்டு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். அதிலும் உலகக் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் மோதிக்கொண்டால் கேட்கவே வேண்டாம். 

அப்படி ஒருபோட்டியில் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவிக்க, 260 ரன்களை எடுத்தது. இலக்கை விரட்டிய பாகிஸ்தான், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

29 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து 28 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் உடற்தகுதியில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் அந்த அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை. இருப்பினும் அப்போட்டியில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் இந்தியாவை தோற்கடித்திருக்க முடியும் என்று தற்போது கூறியுள்ளார் அக்தர் .

இது பற்றி பேட்டி ஒன்றில் அக்தர் கூறுகையில், “2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் என்னை தேர்வு செய்திருக்க வேண்டும். அந்நேரத்தில் அணி நிர்வாகம் நடந்துகொண்டது நியாயமற்றது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கடைசி 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்று எனக்கு தெரியும். அதனால் வான்கடேவில் வெற்றி கோஷங்கள் எதிரொலிக்கும் வகையில் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆசை எனக்கு இருந்தது. 

எங்களது மொத்த நாடும் பத்திரிகைகளும் எங்களின் வெற்றிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். உலகக் கோப்பையை வென்று விடை பெறலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உடற்தகுதியை காரணம் காட்டி அணி நிர்வாகத்தினர் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

இருப்பினும் பயிற்சிக்கு சென்ற நான் 8 தொடர்ச்சியான ஓவர்களை வீசினேன். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அந்த போட்டியில் நான் விளையாடியிருந்தால் நிச்சயம் சச்சின் மற்றும் சேவாக்கை அவுட் செய்திருப்பேன். சச்சின் மற்றும் சேவாக்கை ஆரம்பத்திலே அவுட் செய்திருந்தால் இந்தியாவின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்திருக்கும். 

நிச்சயமாக முதல் 10 ஓவர்களில் அவர்களை அவுட் செய்து இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்தது. அதைவிட பாகிஸ்தான் தோற்ற ஆட்டத்தை ஐந்தாறு மணி நேரங்கள் உட்கார்ந்து பார்த்தது வேதனையாக இருந்தது. தோல்விக்காக அழுபவன் நான் கிடையாது. அதனால் டிரெசிங் அறையில் ஒரு சில பொருட்களை உடைத்தேன். நான் சோகமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது போல் எங்களது தேசமும் இருந்தது'' என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை