மகளிர் டெஸ்ட்: சாதனை படைப்பாரா ஷஃபாலி?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.
அதேசமயம் இந்திய மகளிர் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷஃபாலி வர்மா, நாளைய தினம் இந்திய மகளிர் டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகவுள்ளார்.
சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் ஷஃபாலி வர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது மேஜிக்கை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஷஃபாலி வர்மா குறித்து பேசிய சக வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர்,“எங்கள் அணியில் ஷஃபாலி வர்மா விளையாட வேண்டும் என நாங்கள் எப்போதும் எதிர்பார்ப்பதுண்டு. ஏனெனில் அவர் எதிரணிக்கு சவால் அளிக்கக்கூடிய வீராங்கனை.
அவர் ஒரு வீராங்கனை என்பதால், அவரது டெக்னிக் குறித்து நாங்கள் அதிகம் பேச முயற்சிக்கவில்லை. நாங்கள் எல்லோரும் அவருக்கு ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறோம். இதன் காரணமாக ஷஃபாலியால் தனது விளையாட்டை பயமின்றி விளையாட முடிகிறது.
அதேபோல் வலைபயிற்சியில் ஷஃபாலி சிறப்பான விளையாடியுள்ளதால், கிடைக்கும் வாய்ப்பை அவர் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.