NZ vs SL, 1st Test: கருணரத்னே, மெண்டிஸ் அதிரடி; வலிமையான நிலையில் இலங்கை!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்று அதிக வெற்றி விகிதங்களுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அந்தவகையில், இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2ஆவது அணியாக முன்னேற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று அகமதாபாத்தில் தொடங்கி நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
அதேசமயம் இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்தால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி இந்த டெஸ்ட்டில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்திடம் ஒரு டெஸ்ட்டில் தோற்றால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், இலங்கை - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் இன்று தான் தொடங்கி நடந்துவருகிறது. நியூசிலாந்து - இலங்கை இடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. .
அதன்படி முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான திமுத் கருணரத்னே அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் களமிறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டை போல் விளையாடமல் அடித்து ஆடிய குசால் மெண்டிஸ் 83 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார்.
அதன்பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்களும், தினேஷ் சண்டிமால் 39 ரன்களும் அடித்தனர். டிக்வெல்லா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. இதில் டி சில்வா 36 ரன்களுடனும், கசுன் ரஜிதா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் கைப்பறியுள்ளனர்.