ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் பதிவை டெலிட் செய்த ராயூடு!

Updated: Sat, May 14 2022 14:08 IST
Image Source: Google

ஐபிஎல் தொடர் மூலம் புகழ் பெற்று இந்திய அணியில் இடம்பிடித்ததில் அம்பத்தி ராயுடுவும் ஒருவர். முதலில் மும்பை, பிறகு சென்னை என இரு அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக விளங்கிய அம்பத்தி ராயுடு, கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டார்.

தற்போது 36 வயதான அம்பத்தி ராயுடு, ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் இடம் கிடைக்காத நிலையில், அவர் இந்த முடிவை எடுத்தார். இந்த நிலையில், தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக ராயுடு வுளையாடி வந்தார்.

இந்த நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அம்பத்தி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவித்தார்.

அவரது பதிவில், “இது எனது கடைசி ஐபிஎல் ஆகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கேவுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

 

மும்பை அணிக்காக 2416 ரன்களும், 14 அரைசதங்களும் அடித்துள்ள ராயுடு, சிஎஸ்கே அணிக்காக 1771 ரன்களும், 1 சதமும், 8 அரைசதமும் அடித்துள்ளார். கடந்த சில போட்டியில் அம்பத்தி ராயுடு தனது பழைய ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறனார். வயதும் ஆவதால் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் அம்பத்தி ராயுடு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தவிர்க்க முடியாத வீரராக அம்பத்தி ராயுடு விளங்கினார்.

ஐபிஎல் தொடருக்கு முன்பு கபில்தேவ் நடத்திய ஐசிஎல் டி20 தொடரில் பங்கேற்று பிசிசிஐயால் தடை பெற்ற அம்பத்தி ராயுடு, பிறகு பொது மன்னிப்பு பெற்று ஐபிஎல் தொடரில் களமிறங்கி அதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தவர். இந்தியாவுக்காக 55 ஒருநாள் போட்டியில் விளையாடி 1694 ரன்களும், 6 டி20 போட்டியிலும் ராயுடு விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் ஓய்வு குறித்து வெளியிட்ட டிவிட்டை அவர் நீக்கிவிட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை