பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து அமெலியா கெர்; வைரலாகும் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32 ரன்களையும், காஷ்வி கௌதம் 20 ரன்களையும் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸகைவர், அமெலியா கெர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் யஷ்திகா பாட்டியா 8, ஹீலி மேத்யூஸ் 17, ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதில் அவர் 57 ரன்களைச் சேர்க்க அவருக்கு துணையாக விளையாடிய அமெலியா கெர் 19 ரன்களையும், சஜீவன் சஞ்சனா 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை அமெலியா கெர் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் நான்காவது ஓவரை ஹீலி மேத்யூஸ் வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை தயாளன் ஹேமலதா லெக் சைடில் ஒரு இமாலய சிக்ஸரை அடிக்க முயற்சி செய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் ஹேமலதா அந்த பந்த சிறப்பாக டைம் செய்ததால் நிச்சயம் அது சிக்ஸருக்கு சென்றதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் பந்து அதிக உயர்த்தில் சென்ற காரணத்தால் அது பவுண்டரிக்கு எல்லைகுள் இருக்க, அதனை சரியாக கணித்த அமெலியா கெர் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். இதனால் ஹெமலதா இப்போட்டியில் 9 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் அமெலியா கெர் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.