ஐஎல்டி20: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி; டெஸர்ட் வைப்பர்ஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இன்டர்நேஷ்னல் லீக் என்றழைக்கப்படும் ஐஎல்டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெஸர்ட் வைப்பர்ஸ் அணியின் கேப்டன் காலின் முன்ரோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் கென்னர் லூயிஸ், தனஞ்செய டி சில்வா, காலின் இங்ராம் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, தொடக்க வீரராக களமிறங்கிய பிராண்டன் கிங் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதன்பின் 57 ரன்களோடு அவரும் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அசலங்கா, ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் போன்ற நட்சத்திர வீரர்களும் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே எடுத்தது. வைப்பர்ஸ் அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு முஸ்தஃபா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் முஸ்தஃபா 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் காலின் முன்ரோ ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் - சாம் பில்லிங்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்தார். அதன்பின் ஹேல்ஸும் 64 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த சாம் பில்லிங்ஸ் 35 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருது டெஸர்ட் வைப்பர்ஸ் அணி வநிந்து ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டது.