எமர்ஜிங் ஆசிய கோப்பை: யாஷ் துல் அதிரடி சதம்; இந்தியா அபார வெற்றி!
ஆடவர் எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது ஆட்டத்தில் யுஏஇஏ அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறக்கிய யுஏஇ அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜோனதன் ஃபிகி, அன்ஸ் டாண்டன், லவ்ப்ரீத் சிங் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஆர்யன்ஷ் சர்மா - அஷ்வந்த் சிதம்பரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்யன்ஷ் சர்மா 38 ரன்களுக்கும், அஷ்வந்த் சிதம்பரம் 46 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் வந்த அலி நேசரும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த முகமது ஃப்ராஸ்தின் 35 ரன்களைச் சேர்த்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக ஏ அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. இந்திய ஏ அணி தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேலும் நிதிஷ் ரெட்டி, மனவ் சுதர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கி இந்திய ஏ அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த நிகின் ஜோஸ் - கேப்டன் யாஷ் துல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் யாஷ் துல் சதமடித்து அசத்தியதுடன், இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஒரு சிக்சர், 20 பவுண்டரிகள் என 108 ரன்களையும், அவ்ருக்கு துணையாக விளையாடிய ந்கின் ஜோஸ் 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் இந்திய ஏ அணி 26.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக ஏ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்த யாஷ் துல் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.