கடைசியாக டெண்டுல்கர் பெயரில் ஐபிஎல் விக்கெட்டும் வந்துவிட்டது - மகனுக்கு பாராட்டு தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார் அர்ஜுன் டெண்டுல்கர். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொட்ரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் சீசனில் காயம் காரணமாக விலகினார். இரண்டாவது சீசனில் அவரை பிளேயிங் லெவனில் விளையாட வைக்கப்படவில்லை.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் அறிமுகம் செய்யப்பட்டார்.கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் விளையாட வைக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் முதல் இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
போட்டியின் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி வெற்றி பெற 20 ரன்கள் தேவைப்பட்டது. அழுத்தம் நிறைந்த இந்த நேரத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீசினார். மிகச்சிறப்பாக யார்க்கர் மற்றும் ஒயிடு யார்க்கர் வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அர்ஜுன் டெண்டுல்கர் எடுக்கும் முதல் விக்கெட் இதுவாகும். ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணியுமே இதை கொண்டாடியது. இப்படி இருக்கையில், சச்சின் டெண்டுல்கர் அமைதியாகவா இருப்பார்? ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை வரியில் வாழ்த்து தெரிவித்தது அசத்தினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “பேட்டிங் பவுலிங் இரண்டிலும் மும்பை அணி அசத்தியது. கேமரூன் கிரீன் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கினார். திலக் வர்மா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். ஐபிஎல் நாளுக்கு நாள் பரபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. மும்பை வீரர்கள் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். கடைசியாக டெண்டுல்கர் பெயரில் ஐபிஎல் விக்கெட்டும் வந்துவிட்டது” என்று ட்வீட் செய்திருந்தார். இவரது பதிவு வைரலாகி வருகிறது.