'நாங்கள் இனி அண்ணன் தம்பி' - பிரதமருக்கு நன்றி கூறிய ரஸ்ஸல்
உலக நாடுகள் முழுவதும் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து ஒவ்வொரு நாடும் இந்த வைரஸைத் தடுப்பதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்திவருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பல உலக நாடுகளுக்கும் இந்திய அரசு கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கி உதவிவருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜமைக்காவிற்கு 50 ஆயிரம் டோஸ் கரோனா தடுப்பு மருந்தை இந்தியா வழங்கியது. இதையடுத்து, ஜமைக்காவிற்கு கரோனா தடுப்பு மருந்தை வழங்கிய இந்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் நன்றி தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஸ்ஸலின் அக்காணொலியில், "ஜமைக்காவிற்கு கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கிய இந்தியாவிற்கும், பிரதமர் மோடிக்கும் மிகப்பெரும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த உதவியின் இந்தியாவும் ஜமைக்காவும் இப்போது அண்ணன் தம்பிகள். உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் இச்செயலை ஜமைக்கா மக்கள் பாராட்டுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஆண்ட்ரே ரஸ்ஸல் நன்றி தெரிவித்துள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.