ரஞ்சி கோப்பை 2022: வரலாற்று சாதனை நிகழ்த்திய மும்பை!
ரஞ்சி தொடரின் லீக் போட்டிகள் ஐபிஎல்லுக்கு முன் நடந்த நிலையில், ஐபிஎல் முடிந்து நாக் அவுட் போட்டிகள் நடந்துவருகின்றன. கடந்த 6ஆம் தேதி முதல் காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன.
இதில் மும்பை - உத்தரகண்ட் அணிகள் மோதிய காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, சுவேத் பார்க்கரின் இரட்டை சதம்(252), சர்ஃபராஸ் கானின் சதம்(153) மற்றும் மற்ற சில வீரர்களின் கணிசமான பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 647 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய உத்தரகண்ட் அணி வெறும் 114 ரன்களுக்கு சுருண்டது. 533 ரன்கள் என்ற மெகா முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதமும்(103), பிரித்வி ஷா(72) மற்றும் ஆதித்ய தரே(57) ஆகிய இருவரும் அரைசதம் அடிக்க, 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் அடித்து 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது மும்பை அணி.
மொத்தமாக 794 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி, 795ரன்கள் என்ற கடின இலக்கை உத்தரகண்ட் அணிக்கு நிர்ணயித்தது. உத்தரகண்ட் அணி வெறும் 69 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 725 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது மும்பை அணி.
முதல் தர கிரிக்கெட்டில் மும்பை அணி பெற்ற இந்த வெற்றிதான் மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்திலான வெற்றி ஆகும். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது மும்பை அணி.
இதற்கு முன் 1929-1930ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய உள்நாட்டு போட்டியில் குயின்ஸ்லாந்து அணியை நியூ சௌத் வேல்ஸ் அணி 685 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுதான் முதல் தர கிரிக்கெட்டில் அபாரமான வெற்றியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.