இது வழக்கமான போட்டி தான்; மற்றபடி ஒன்றுமில்லை - விராட் கோலி!
ஐபிஎல் தொடர் முடிவடைந்துவிட்டதால் இந்திய வீரர்கள் அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றனர். டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தகுதிச்சுற்று போட்டிகள் ஓமனிலும், சூப்பர் 12 போட்டிகள் அமீரகத்திலும் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் 24ஆம் தேதியன்று முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரை ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புடன் கொண்டு செல்ல இந்த திட்டத்தை ஐசிசி போட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் பிரச்னைகள் காரணமாக ஐசிசி தொடர்களில் மட்டும் தான் இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன. நீண்ட வருடங்களுக்கு பிறகு மோதுவதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த போட்டி குறித்து கடந்த சில தினங்களாக பேசி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் ஆகியோர் இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிடுவோம், இந்த முறை இந்தியாவை வெல்வது சுலபம் தான் எனத்தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் இந்த பேச்சுகளுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை இது எனக்கு மற்ற போட்டிகளை போன்றுதான். இந்த போட்டி மீது மற்றவர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். உண்மையை கூறவேண்டும் என்றால் எனக்கு எதிர்பார்ப்புகளே இல்லை.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த போட்டிக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமமாக இருக்கும். டிக்கெட் விளைகளும் மிக அதிகமாக இருக்கும். எனது நண்பர்கள் சிலரும் என்னிடம் டிக்கெட்கள் உள்ளதா? முன் வரிசையில் டிக்கெட் கிடைக்குமா என கேட்பார்கள். நான் இல்லை எனக்கூறும் சூழல் தான் இருக்கும். அவ்வளவுதான் இந்த போட்டியின் நிலைமை. மற்றபடி வேறு ஒன்றும் ஸ்பெஷல் இல்லை. எங்களை பொறுத்தவரை இந்த போட்டியை வழக்கமான போட்டிகளை போன்றே எதிர்கொள்வோம்” எனத்தெரிவித்துள்ளார்.