கரோனா நிவாரணம்: ஒற்றை முயற்சியில் சுமார் 11 கோடி நிதி திரட்டிய கோலி!
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பிரபலங்கள் பலரும் கொரோனா நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் நிதியுதவி சேகரிக்கும் முயற்சியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டிருந்தார்.
விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா இணைந்து கரோனா நிதியுதவி உதவி திரட்ட ‘கெட்டோ' என்ற திட்ட பெயரில் சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கினர். அவர்கள், அதில் முதல் ஆளாக ரூ.2 கோடி நிதி உதவியும் செய்து வியக்க வைத்தார்.
இந்நிலையில் மே 7ஆம் தேதி தொடங்கப்பட்ட அந்த வலைதளம் 7 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்த விராட் கோலி, அதற்குள்ளாக ரூ.7 கோடி திரட்ட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்தார். மேலும் அந்த வலைதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் விராட் கோலி தெரிவித்த 7 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. அதன் படி அந்த வலைதளத்தில் சுமார் 11 கோடியே 39 லட்சத்து 11ஆயிரம் ரூபாய் ( ரூ. 11, 39,11, 820) நிதி சேர்ந்துள்ளது. ரூ.7 கோடி இலக்காக நிர்ணயித்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கூடுதலாக ரூ. 4.39 கோடி நிதி சேர்ந்துள்ளது. இந்த பணமானது, நேரடியாக ஏசிடி கிராண்ட்ஸ் என்ற அமைப்புக்கு சென்று நாடு முழுவதும் ஆக்சிஜன் உதவிகளை ஏற்படுத்தயுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விராட் கோலி, “நாங்கள் நிர்ணயித்த இலக்கை 2 மடங்காக அடைய வைத்துள்ளீர்கள். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தற்போது வார்த்தைகளே இல்லை. நாங்கள் எடுத்த முயற்சியில் நன்கொடை அளித்தும், அதனை பகிர்ந்தும் உதவி செய்த அனைவருக்கு மிகப்பெரிய நன்றிகள். இந்த கடினமான நேரத்தை நாம் ஒன்றிணைந்து கடந்து செல்வோம்” என தெரிவித்துள்ளார்.