பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்; ரோஹித்தின் அப்டேட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!
டி20 உலக கோப்பை இன்னும் 12 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய 2 பெரிய வீரர்கள் காயத்தால் டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.
ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் டி20 உலக கோப்பையில் விளையாடவில்லை. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் அபாரமாக செயல்படக்கூடிய ஜடேஜா ஆடாததே பேரிழப்பு என்றிருந்த நிலையில், அதைவிட பெரிய அதிர்ச்சியாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவும் காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து விலகினார்.
முதுகுப்பகுதியில் காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து விலகிவிட்டார் பும்ரா. பவர்ப்ளே, மிடில் ஓவர், டெத் ஓவர் என ஆட்டத்தின் எந்த சூழலிலும் அபாரமாக பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர் பும்ரா. அவர் டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு கண்டிப்பாகவே பெரிய இழப்பு.
பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரில் ஒருவர் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவும் ஆடாத நிலையில், டி20 உலக கோப்பையில் இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. நல்ல வேரியேஷனில் வீசக்கூடிய அர்ஷ்தீப் சிங்கைத்தான் டெத் ஓவரில் அதிகமாக சார்ந்திருக்கிறது இந்திய அணி. ஹர்ஷல் படேலும் டெத் ஓவர்களை நன்றாக வீசுவார் என்றாலும், அர்ஷ்தீப் சிங்கும் முக்கியமான வீரர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் போடும்போது, இந்திய அணியில் 3 மாற்றங்கள் என்று குறிப்பிட்ட கேப்டன் ரோஹித் சர்மா, கோலி மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு. அர்ஷ்தீப் சிங்கிற்கு முதுகுவலி என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக அவர் இந்த போட்டியில் ஆடவில்லை என்றார்.
அது எதுவும் பெரிய காயமோ இருந்துவிடுமோ என்ற அச்சம் எழலாம். ஆனால் லேசான வலி தான் என்றும், ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக அவர் ஆடவில்லை என்று ரோஹித் தெரிவித்தார். எனவே அர்ஷ்தீப்பின் காயம் பெரிது இல்லை என்பது இப்போதைய சூழலில் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.