ஆஷஸ் தொடர்: ரூட், மாலன் அபாரம்; தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி ட்ராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் 425 ரன்களைச் சேர்த்தது.
இதில் ட்ராவிஸ் ஹெட் 152 ரன்களையும், டேவிட் வார்னர் 94 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஹாசீப் ஹமீத் 27 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் - டேவிட் மாலன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தனர்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைக் குவித்துள்ளது. ஜோ ரூட் 86 ரன்களுடனும், டேவிட் மாலன் 80 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை தொடங்கும் நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 58 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.