ஆஷஸ் 2023: கடின இலக்கை நிர்ணயித்த ஆஸி; ஆரம்பத்திலேயே தடுமாறிய இங்கிலாந்து!

Updated: Sat, Jul 01 2023 23:46 IST
Image Source: Google

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து  தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 58 ரன்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.  இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இருப்பினும், ஸ்மித் 34 ரன்களில் ஜோஷ் டங் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 7  ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். உஸ்மான் கவாஜா 77 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேமரூன் க்ரீன் 18 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 21 ரன்களுக்கும், பாட் கம்மின்ஸ் 11 ரன்களுக்கும் என வந்தவேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் டங், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி மற்றும் ஒல்லி போப் ஆகியோர் தலா 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் பாட் கம்மின்ஸின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் இங்கிலாந்து அணி 45 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட்டுடன் இணைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதன்மூலம் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் பென் டக்கெட் 50 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::