Ashes 2023, 3rd Test: இங்கிலாந்தை திணறவைத்த கம்மின்ஸ்; தடுமாற்றத்தில் ஆஸி!

Updated: Fri, Jul 07 2023 23:20 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸில் தொடங்கியது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 19 ரன்களுடனும், பேர்ஸ்டோ 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சற்று நேரத்திலேயே ஜோ ரூட் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பேர்ஸ்டோவுடன் ஜோடி  சேர்ந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இதில் பேர்ஸ்டோவ் 12 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மொயின் அலி 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கு 7  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் மார்க் வுட் அதிரடியாக விளையாடினர். இருப்பினும், மார்க் வுட் 8 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 108 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5  சிக்ஸர்கள் அடங்கும். 

இறுதியில், இங்கிலாந்து 237 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டுகள், மிட்செல் மார்ஸ் மற்றும் டாட் மர்ஃபி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.  இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மீண்டும் ஸ்டூவர்ட் பிராட் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுஷாக்னே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் கவாஜா 43 ரன்களிலும், மார்னஸ் லபுஷாக்னே 33 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மொயீன் அலி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையை கட்டினார். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 142 ரன்கள் முன்னிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை