காயமடைந்த நாதன் லையன்; பின்னடைவை சந்திக்கும் ஆஸி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம் லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் நேற்றைய 2ஆம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையனுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவர் 13 ஓவர்கள் மட்டுமே வீசி 1 விக்கெட்டை வீழ்த்தினார். லையனின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.
அவர் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகள் என 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவர் ஜொலித்தார். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கம்மின்சுடன் ஜோடி சேர்ந்து நாதன் லயன் சிறப்பான பார்னர்ஷிப்பை அமைத்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தில் அவர் மீண்டும் அணியின் இணைவாரா என்பது சந்தேகம்தான். இது குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், “அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் நன்றாக இல்லை என்றால், அது எங்களுக்கு பெரிய இழப்பு. அவரது கை விரலில் ஏதும் பிரச்சினை இல்லை. அவர் வருகிற டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக டோட் மர்பி இடம் பெறுவார்” என்று கூறியுள்ளார்.