‘க்ரை பேபிஸ்’ ஸ்டோக்ஸை வம்பிழுத்த ஆஸ்திரேலிய ஊடகம்!
ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் என்ற சொல்லை இங்கிலாந்து வீரர்களும், ஊடகங்கள் தங்களின் கைகளில் எடுத்துள்ளன. ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி பேஸ் பால் திட்டம் மூலமாக வெற்றி கிடைக்கும் என்று அபார நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணி பேஸ் பால் திட்டத்தை தங்களது வழக்கமான கிரிக்கெட் மூலமாகவே எளிதாக வீழ்த்தியது.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் கூட ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றியை பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றியை பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இன்னும் ஒரேயொரு போட்டியில் வென்றால், ஆஸ்திரேலிய அணி 22 ஆண்டுகளுக்கு பின் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து மண்ணில் வென்று சாதனை படைக்கும்.
இதனிடையே 2ஆவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒட்டுமொத்த இங்கிலாந்து அணி வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் என அனைவரும் ஸ்பிரிட் ஆப் தி கேம் என்று பேச தொடங்கியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட், ஆஸ்திரேலிய அணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து ஊடகங்களும் கிரிக்கெட்டின் மெக்காவிலேயே விளையாட்டின் புனிதம் களங்கப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினர். இவ்வளவு ஏன், இங்கிலாந்து பிரதமர் கூட ஸ்பிரிட் ஆப் தி கேம் பற்றி பேசியுள்ளார்.
இதற்கு ஆஸ்திரேலிய ஊடகங்களும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர். கிரிக்கெட் புனிதம் என்பது விதிகளின் படி விளையாடுவதே என்று கூறியுள்ள ஆஸ்திரேலியா பத்திரிகை ஒன்று, பென் ஸ்டோக்ஸை அழுகாச்சி குழந்தையாக சித்தரித்த புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றன. இது சர்வதேச அளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு பென் ஸ்டோக்ஸ், “அது நிச்சயமாக நான் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு 2 நாட்களே இருக்கும் நிலையில், உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் இங்கிலாந்து அணியை அந்நாட்டு ஊடகங்களே விளாசி தள்ளும். இன்னும் சொல்லப் போனால், பேஸ் பால் திட்டத்தையே மாற்ற வேண்டிவரலாம். இதனால் லீட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.