ஆஷஸ் 2023: லார்ட்ஸ் டெஸ்டிலிருந்து விலகிய நாதன் லையன்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் நாதன் லையன் 145 ஆண்டுகளில் எந்த பந்துவீச்சாளரும் படைக்காத சாதனையை படைத்தார்.
தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து அசத்தினார். அலெஸ்டர் குல், ஆலன் பார்டர், மார்க் வாக், சுனில் கவாஸ்கர், மெக்கல்லம் என்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்த வரிசையில் நாதன் லையன் முதல் பந்துவீச்சாளராக இடம்பெற்றது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், 100ஆவது டெஸ்ட் போட்டியின் பாதி ஆட்டத்துடன் நாதன் லயன் காயம் காரண்னமாக விலகியுள்ளார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி வீரர்கள் அடித்த பவுண்டரியை தடுக்க நாதன் லையன் கடுமையாக முயற்சித்தார். அப்போது திடீரென அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சக வீரர்களின் உதவியுடன் ஓய்வறை சென்ற லையன், மீண்டும் களத்திற்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்திற்காக லார்ட்ஸ் மைதானம் வரும் போது, நாதன் லையன் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தார். இதன் மூலம் நாதன் லையனின் காயம் சாதாரணமாதல்ல என்று ரசிகர்கள் அறிந்துகொண்டனர். இந்த நிலையில் 2ஆவது டெஸ்டில் இருந்து விலகுவதாக நாதன் லையன் மற்றும் ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவருக்கு பதில் எந்த வீரர் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கு முன் நாதன் லையன் 495 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் கிராலே விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதனால் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதியோடு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.